Press "Enter" to skip to content

சிதம்பரத்தில் நகராட்சி ஆணையரை மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்

கடலூர்:  சிதம்பரம் நகராட்சி ஆணையரை மாற்ற வலியுறுத்தி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் தொடர்ந்து தொழில் வரி, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, குப்பை வரி உள்ளிட்டவைகளை கட்டாமல் இருந்ததால் ரூபாய் 13 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்தை, நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிதம்பரம் நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது மற்றும் மின்கட்டணம் செலவு உள்ளிட்ட இதர செலவுகளுக்கு கோடிக்கணக்கான தொகை நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை கட்டக்கோரி நகராட்சி நிர்வாகத்திடம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா,  நிலுவையில் உள்ள அனைத்து வரிகளையும் வசூலிக்க பல்வேறு குழுக்களை நியமித்துள்ளார். அதனடிப்படையில்,  வரி வசூலிப்பு குழுவினர், சம்பந்தப்பட்ட வணிக நிறுவனம் மற்றும் வீடுகளில் வரி பாக்கியை செலுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நோட்டீஸ் கொடுத்தும் வரிபாக்கி செலுத்தாத 8 கடைகளின் வாயிலின் அருகே நகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டது. இதற்கு சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து 3 ஆயிரம் கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகளை ஆய்வு செய்ய வலியுறுத்தியும் சிதம்பரம் வர்த்தக சங்கத்தினர்,  24 மணி நேரமும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், நகரில் உணவு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் மூடப்பட்டால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து வந்து சிதம்பரத்தில் தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைவார்கள், எனவே, இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு கடையடைப்பு போராட்டத்தை திரும்பபெற வலியுறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வர்த்தகர்கள், நகராட்சி ஆணையர் மாற்றப்படவில்லை எனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »