Press "Enter" to skip to content

காத்திருக்கும் “ஹாட் சீட்”… தமிழக தலைவராவாரா சசிகலா புஷ்பா?.. பரபரக்கும் பாஜக

சென்னை: மிக நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் பாஜகவில் இணைந்திருக்கிறார் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா. தடாலடி அரசியலால் பரபரப்பாக பேசப்பட்ட சசிகலா புஷ்பாவையே தமிழக தலைவராக கட்சி மேலிடம் நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர் பாஜகவினர்.

அதிமுகவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட்புக்கிங்கில் இடம்பிடித்து விறுவிறுவென பல்வேறு பதவிகளை பெற்றவர் சசிகலா புஷ்பா. அவருக்கு ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பி.யும் கொடுத்தார். ஆனால் சசிகலா புஷ்பாவின் டெல்லி தொடர்புகள் பெரும் சர்ச்சையாகின.

இதனால் ஜெயலலிதாவின் கடும் அதிருப்திக்குள்ளானார் சசிகலா புஷ்பா. இதையடுத்து அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதாகவும் ஜெயலலிதா அறிவித்தார். இதனால் ராஜ்யசபாவில் கொந்தளிப்புடன் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தம்மை அடித்ததாக கூறி நீதி கேட்டு பரபரப்பை கிளப்பினார்.

imageதெ.தேசம் பாணியில் 7 அதிமுக ராஜ்யசபா எம்.பிக்கள் விரைவில் பாஜகவில் கூண்டோடு ஐக்கியம்?

அணிகள் தாவிய சசிகலா புஷ்பா

ஆனாலும் முறைப்படி ராஜ்யசபாவுக்கு சசிகலா புஷ்பா நீக்கம் தொடர்பாக அதிமுக தலைமை தெரிவிக்காமல் இருந்தது. இதனால் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாகவே இருந்து வருகிறார் சசிகலா புஷ்பா. அவரது பதவிக் காலம் இந்த ஆண்டு முடிவடைகிறது. பின் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது திடீரென ஓபிஎஸ் அணி பக்கம் போனார். அங்கிருந்து தினகரன் அணிக்கு தாவினார்.

காத்திருக்க சொன்ன பாஜக

இருப்பினும் சசிகலா புஷ்பாவை அதிமுகவின் எந்த கோஷ்டியும் நம்பிக்கைக்குரியவராக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் டெல்லியில் பாஜகவிடம் மிகவும் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார் சசிகலா புஷ்பா. இதனால்தான் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவடைந்த உடனேயே பாஜக பக்கம் தாவ சசிகலா புஷ்பா முயற்சித்தார். ஆனால் பாஜக மேலிடம் பொறுமையாக காத்திருக்க அறிவுறுத்தியது.

தமிழக பாஜக தலைவர்

இதனிடையே தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்குப் பின்னர் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மிக கடுமையான போட்டி நிலவி வருகிறது. பிற மாநிலங்கள் பலவற்றுக்கும் தலைவர்களை நியமித்த பாஜக மேலிடம் இன்னமும் தமிழகத்துக்கு மட்டும் தலைவரை நியமிக்காமல் இருக்கிறது.

பாஜகவில் ஐக்கியம்

இந்நிலையில் சசிகலா புஷ்பா பாஜகவில் எதிர்பார்த்தபடியே இணைந்துவிட்டார். தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜகவில் தலைவர்கள் ஜாதிய ரீதியாக கோஷ்டிகளாக பிளவுபட்டு நிற்கின்றனர். ஒவ்வொரு கோஷ்டியும் இன்னொரு கோஷ்டியை குழிபறிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். இதனை உணர்ந்துதான் பாஜக மேலிடம் அமைதியாக இருந்து வருகிறது. தற்போது சசிகலா புஷ்பா பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கிறார்.

நாடார் வாக்குகள்

தென் தமிழகத்தில் நாடார் சமூக வாக்குகளை தக்க வைக்க சசிகலா புஷ்பாவை பயன்படுத்தலாம் என கணக்கு போடுகிறதாம் பாஜக. மேலும் தமிழகத்துக்கு தலைவராக ஒரு திராவிட முகம்தான் கை கொடுக்கும் என்பதை நம்புகிறது பாஜக. இதனால்தான் அதிமுகவில் இருந்து கட்சி தாவிய நயினார் நாகேந்திரன் பெயரும் தலைவர் பதவிக்கு அடிபட்டது.

பாஜக தலைவராகிறாரா சசிகலா புஷ்பா?

இப்போது இப்பட்டியலில் சசிகலா புஷ்பாவின் பெயரும் இணைந்திருக்கிறது. சசிகலா புஷ்பாவை பொறுத்தவரை தடாலடியான அரசியல் செய்யக் கூடியவர். அவர் தமக்கு கொடுக்கும் பொறுப்புகளை முழுமையாக செய்யக் கூடியவர் என்கிற இமேஜ் இருக்கிறது. அதனால் சசிகலா புஷ்பாவையே தமிழக பாஜக தலைவராக நியமித்தாலும் ஆச்சரியம் இல்லை என்கின்றன பாஜக வட்டாரங்கள்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »