Press "Enter" to skip to content

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்களில் அதிகரித்து வரும் காட்டுப்பன்றி அட்டகாசம்: நடவடிக்கை கோரி அமைச்சரிடம் மனு

உடுமலை: உடுமலை,மடத்துக்குளம் தாலுகாக்களில் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவு வரை காட்டுப்பன்றிகள் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் வந்து விட்டன. இவை கிராமப்புறங்களிலுள்ள விவசாய விளைநிலங்கள், நீர் நிலைகள் மற்றும் பள்ளம் படுகைகளில் குட்டி போட்டு தங்கி ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டன. காட்டுப்பன்றிகளால் மனித உயிர்களுக்கும், பயிர்களுக்கும்  தொடர்ந்து  பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் அரசிடமும் பல முறை மனு கொடுத்தும் உரிய தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில்,  காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், மற்ற வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும், பாதிக்கப்  பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜனவரி 17ம் தேதி உடுமலை வனத்துறை அலுவலகம் முன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அன்றே திருப்பூர் கலெக்டருடன் நடந்த பேச்சுவார்த்தையில், அவர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. பின்னர் 18ம் தேதி மாவட்ட வன அலுவலருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து கலெக்டர் மற்றும் மாவட்ட வன அலுவலர் இருவரும் தமிழக அரசுக்கு விவசாயிகளின் கோரிக்கைகளை வழிமொழிந்து அறிக்கை அனுப்பினர். இருந்தபோதும் இதுவரை அரசு காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் காட்டுப்பன்றிகளால் உயிரிழப்பு ஏற்படுவதும், தாக்கப்பட்டு படுகாயம் அடைவதும், காட்டு யானைகளால் பெரும் சேதம் ஏற்படுவதும் தொடர் கதையாகவே உள்ளது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து எரிசினம் பட்டியில் விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது முடிவெடுக்கப்பட்டது.

பின்னர் நேற்று காலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணணை நேரில் சந்தித்து உடுலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.தொடர்ந்து அரசு காட்டுப்பன்றிகள் விஷயத்தில் மவுனமாக இருக்கும்பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »