Press "Enter" to skip to content

விருதுநகர் மெயின் பஜாரில் சரக்கு பார வண்டிகளால் பகலில் போக்குவரத்து இடையூறு: போக்குவரத்து காவல் துறையினர் கவனிப்பார்களா?

விருதுநகர்: விருதுநகர் மெயின்பஜாரில் பகல் நேரத்தில் சரக்குகளை ஏற்றி, இறக்க வரும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். விருதுநகர் மெயின்
பஜாரில் கடந்த ஓராண்டாக டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால், தள்ளுவண்டி, சாலைகளில் கடை வைத்து ஆக்கிரமிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மெயின்பஜார் வழியாக சாத்தூர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, பேராலி உள்ளிட்ட டவுன் பஸ்கள் இயக்கத்திற்காகவும், பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர் மெயின் பஜார் வழியாக சென்று வருவதால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க இரவு 8 மணிக்கு மேல்  காலை 8 மணிக்குள் லாரிகளில் சரக்குகளை ஏற்றி, இறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தெப்பம் இறக்கத்தில், மரக்கடை சந்தில் உள்ள லாரி செட்டில் சரக்குகளை ஏற்றி, இறக்க வரும் லாரிகள் நகராட்சி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மேலும் லாரிகளை சிறிய சந்திற்குள் திருப்ப முடியாமல் லாரி டிரைவர்கள் சிரமப்படும்போது மெயின்பஜாரில் இருந்து வெளியே வரும் வாகனங்களும், எம்ஜிஆர் சிலை, பழைய அருப்புக்கோட்டை ரோட்டில் இருந்து தெப்பம் நோக்கி பஜாருக்குள் செல்லும் வாகனங்கள், வாகன ஓட்டிகள் காத்திருப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. குறுகிய சந்தில் லாரிகளை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில் இயக்குவதை போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »