Press "Enter" to skip to content

உத்தமபாளையத்தை மையமாக கொண்டு இலவச அமரர் ஊர்தி சேவை தொடங்கப்படுமா?

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தை மையமாக வைத்து இலவச அமரர் ஊர்தி வாகன சேவை உடனடியாக தொடங்க தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பெரிய தாலுகாவாக உள்ளது. சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகள், தேவாரம், கோம்பை, ஓடைப்பட்டி, கூடலூர், காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி, குச்சனூர் உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு பல்வேறு நோய்களுக்காக தினந்தோறும் பல ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதேபோல் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளில் விபத்துக்களால் சாவுகள், நெஞ்சு வலி மரணங்கள், இயற்கை மரணங்கள் அதிகளவில் நடக்கின்றன.

இதனால் இறந்தவர்களின் உடல்களை அவர்களது ஊர்களுக்கு கொண்டு செல்வதற்காக தமிழக அரசு இலவச அமரர் ஊர்தி சேவையை தொடங்கி உள்ளது. தேனியை மையமாக கொண்டு இது இயங்கி வருகிறது. ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால் அரசு மருத்துவமனைகளில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல இவை பெரிதும் உதவுகின்றன. அதே நேரத்தில் தேனியில் இருந்து கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய ஊர்களுக்கு வருவதற்குள் குறைந்தது 1 மணிநேரத்திற்கு மேலாகிறது. சில நேரங்களில் தேனி ஆம்புலன்ஸ் இல்லாத போது தனியார்களை நோக்கி பொதுமக்கள் செல்கின்றனர். அங்கு குறைந்த பட்ச கட்டணங்களே இல்லாத நிலை தொடர்கிறது. இதனால் வசதியற்ற மக்கள் திண்டாடுகின்றனர்.

எனவே, உத்தமபாளையத்தில் அரசு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரிதும் வசதியாக இருக்கும். தனியார்களை நோக்கி செல்லாத நிலை உண்டாகும். எனவே, உடனடியாக அரசு அமரர் ஊர்தி வாகனத்தை உத்தமபாளையத்திலோ அல்லது கம்பத்திலோ நிறுத்துவதற்கு தேனி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘தனியாருக்கு கடிவாளம்’
பெருகி வரும் மருத்துவமனை மரணங்களை கணக்கில் எடுத்து தேனி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர் ஆகியோர் உரிய அறிக்கையை தேனி கலெக்டரிடம் சமர்ப்பித்து பொதுமக்கள் பெரிதும் பயன்பெறக்கூடிய இலவச அமரர் ஊர்தி சேவையை உத்தமபாளையம், கம்பம், உள்ளிட்ட ஊர்களில் தொடங்கிட வேண்டும். இதனால் இரவு நேரங்களில் ஏற்படக்கூடிய மரணங்கள், கொடிய விபத்துக்களில் ஏற்படக்கூடிய சாவுகள் போன்றவற்றை கொண்டு செல்ல வசதியாக இருக்கும். அமரர் ஊர்திகளில் வெளிமாவட்டங்களுக்கும் இலவசமாக பிணங்கள் கொண்டு செல்லப்படும்போது ஏழை மக்கள் பெரிதும் பயன்பெறுவர். தனியார்களுக்கு இதன் மூலம் கடிவாளம் போடப்படும்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »