Press "Enter" to skip to content

நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா பயணம்- நேரில் சந்திக்க முடியவில்லை- உயர்நீதிநீதி மன்றத்தில் கர்நாடகா காவல் துறை

பெங்களூரு: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளதாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

நித்தியானந்தா மீது கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றத்தில் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள நித்தியானந்தா 50 முறை வாய்தாக்கள் வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி அவரது முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை நீதிபதி குன்ஹா விசாரித்து வருகிறார்.

இவ்வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையின் போது, நித்தியானந்தாவுக்கு 50 முறை வாய்தாக்கள் கொடுத்தது குறித்து நீதிபதி குன்ஹா அதிருப்தி வெளியிட்டார். மேலும் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை ஆஜராக உத்தரவிடக் கோரும் சம்மனை நேரில் வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பான அறிக்கையை திங்களன்று தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கர்நாடகா போலீசாருக்கு நீதிபதி குன்ஹா உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் மனுவைத் தாக்கல் செய்த கர்நாடகா போலீசார், பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லை. நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். அதனால் அவரது இருப்பிடம் குறித்து தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

அப்போது கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர், ஜாமீன் நிபந்தனைகள் எதனையும் நித்தியானந்தா மீறவில்லை என்றும் குறிப்பிட்டார். நித்தியானந்தா போலி பாஸ்போர்ட் மூலமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து தெரிவிக்க சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா ஆன்மீக சுற்றுலா சென்றிருப்பதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கில் வரும் 5-ந் தேதி தீர்ப்பளிப்பதாக தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »