Press "Enter" to skip to content

கே.வி.குப்பம் பகுதியில் அதிர்ச்சி: காவல் துறைகாரரின் ஆட்டை திருடிய கும்பல்

வேலூர்: கே.வி.குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் அருகே கட்டிவைக்கும் ஆடுகளை இரவு நேரங்களில் மர்ம கும்பல் திருடி வந்த நிலையில், போலீஸ்காரரின் ஆட்டையும் திருடிச் சென்றுள்ளனர்.வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில், ஆலங்கனேரி, வடுகன்தாங்கல், லத்தேரி உள்பட சுற்றுப்புறப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வீடுகள் மற்றும் கொட்டகையில் கட்டிவைக்கும் ஆடுகளை மர்ம கும்பல் திருடி செல்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் ைபக்குகளில் வலம் வரும் இந்த கும்பல் நோட்டமிட்டு ஆடுகளை திருடுகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியுள்ளனர்.

இந்நிலையில் ஆலங்கனேரி பகுதியில் வசிக்கும் ஒரு போலீஸ்காரரின் ஆடும் தப்பவில்லை. இவர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் வெளியே கட்டி இருந்த ஆட்டை மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து நேற்று திருடிச் சென்றுள்ளார். இதேபோல் ஒவ்வொரு ஊராக சென்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டி வரும் சம்பவம் கிராமப்புற மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: ஆடுகளை குறி வைத்து மர்ம கும்பல் திருடி செல்கின்றனர். திருடி செல்லும் ஆடுகளை சந்தைகளில் விற்பனை செய்துவிடுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அதுமட்டுமின்றி ஆட்டை எல்லாம் நாங்கள் எங்கு சென்று கண்டுப்பிடிப்பது என்று போலீசார் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். இன்ஸ்பெக்டர் வந்து பிறகு வாருங்கள் என்று கூறுகிறார்கள். அவர் எப்போது வருவார் என்று தெரிவது இல்லை. இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் போலீசார் ரோந்து பணிக்கு வருவதே கிடையாது. இதனால்தான் மர்ம கும்பல் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். ஆடுகளை திருடும் மர்ம கும்பலை போலீசார் கண்காணித்து பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »