Press "Enter" to skip to content

ரஜினி பெற்றோர் பிறப்பிடம் எது..? சான்றிதழ் வெளியிட தயாரா..? ஜவாஹிருல்லா அதிரடி கேள்வி!

ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது? அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா? மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் சிஏஏ சட்டம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு ஆபத்து இல்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு மிகவும் முக்கியமான ஒன்று. அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதாயத்துக்காக இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் முன் ஆராய வேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.


ரஜினியின் பேட்டி குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “ரஜினி சொல்வது முற்றிலும் தவறு. சிஏஏ, என்.ஆர்.சி., என்.பி.ஆர். என அனைத்தையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். சிஏஏக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை மாணவர்கள்தான் முன்னெடுத்துவருகிறார்கள். இதை எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை. மாணவர்களின் எதிர்ப்பை தணிக்கும் வகையில் பாஜகவின்  முகவராக இருக்கும் ரஜினியை மத்திய அரசு பயன்படுத்துகிறது.


மாணவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு ரஜினிக்கு எந்தத் தகுதியும் இல்லை. மாணவர்கள் சிகரெட் புகைப்பவர்களாகவும் மது அருந்தக்கூடியவராகவும் மாற ரஜினியின் திரைப்படங்களே காரணம். என்.பி.ஆர். என்பது அபாயகரமானது. தனிநபரின் சொந்த விவரங்களை என்.ஆர்.பி. மூலம் சேகரித்து, வாக்காளர் பட்டியல்போல வெளிப்படுத்தும் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இந்தியாவின் முதல் பெண் முதல்வராக இருந்த அன்வரா தாஹிக்கு குடியுரிமை கிடைக்கப்போவதில்லை. அவருக்காகக் குரல் கொடுக்க ரஜினி தயாரா? அஸ்ஸாமில்பல லட்சம் இஸ்லாமியர்களை குடியுரிமை இல்லாதவர்களாக மாற்றக் கூடிய நிலைக்கு ரஜினி பதில் சொல்வாரா? தேவையில்லாமல்  மதகுருக்கள் பற்றி பேசும் ரஜினியின் வாயடைக்க வேண்டும். பாஜகவுக்காக ரஜினி இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவது மோசமான ஒன்று. ரஜினிக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன், ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது? அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா?” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »