Press "Enter" to skip to content

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு… யாரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது..? அதிமுக அரசை அலறவிடும் திமுக!

இனியும் டி.என்.பி.எஸ்.சி.யின் தேர்வு முறைகேட்டை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் சிபிசிஐடி விசாரிப்பதில் எந்தப் பயனும் இருக்காது என்று திமுக பொருளாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குருப் தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. தேர்வை நடத்திய அதிகாரிகளே இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த இடைத் தரகர் ஜெயக்குமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆகியிருப்பது ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக உள்ளது. சிபிசிஐடி போலீஸார் அவரை தேடி வருகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் அவர் சென்னையிலேயே சரண்டர் ஆகியிருக்கிறார். அப்படியெனில், “அவரை தேடுகிறோம்” “விரைவில் பிடிபடுவார்” என்பதெல்லாம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் “எந்த உயரதிகாரி” “எந்த அமைச்சர்” “எந்த உயர்மட்டத்தை” தப்பவைக்க பரப்பப்பட்ட செய்திகளா என்ற கேள்வி எழுகிறது.
விஏஓ உள்ளிட்ட க்ரூப்-2ஏ மற்றும் க்ரூப்-4 தேர்வுகளில் இதுவரை காவல் உதவியாளர் சித்தாண்டி 22 பேருக்கும், இன்னொரு காவலர் பூபதி 5 பேருக்கும் முறைகேடு செய்து வேலை வாங்கிக்கொடுத்திருப்பதும், இருவரும் சேர்ந்து 2.55 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றிருப்பதும் பத்திரிக்கைகளில் வெளிவந்துகொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை பேருக்கு இது மாதிரி முறைகேடு மூலம் வேலை, இன்னும் எத்தனை கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டிருக்கிறது? இவ்வளவுக்குப் பிறகும் டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முதல் உயரதிகாரி வரை ஏன் எவரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்பதெல்லாம் புதிர்.
ஒரு இமாலய முறைகேடு பற்றி கிடைக்கும் தகவல்களை பெற்று விசாரணையை நேர்மையாக நடத்தவேண்டும் என்று கூறவேண்டிய டி.என்.பி.எஸ்.சி-யின் துறை அமைச்சர் ஜெயக்குமார், “வதந்தி பரப்புவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பும்” என்று காவல்துறைக்கே அவர்தான் துறை அமைச்சர் என்பது போல் பேட்டியளிப்பது “மிகப்பெரிய தேர்வு ஊழலை” மூடி மறைக்கும் சதித் திட்டத்திற்கு துணை போகிறார் என்றே தோன்றுகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, ஒரு பாரம்பரியமிக்க தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை சிதைக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் இதுகுறித்து முதல்வர் எதுவுமே கூறாமல் இருப்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது.
ஆகவே சிபிசிஐடி தேடிக்கொண்டிருந்த இடைத் தரகரும் முக்கிய குற்றவாளியுமான ஜெயக்குமார் எப்படி சென்னையின் இதயத்தில் உள்ள சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார்? அவருக்கு இது நாள் வரை அடைக்கலம் கொடுத்து சரண்டர் அடைய வைத்தது யார்? இத்தனை முறைகேடுகளுக்குப் பிறகும் நேர்மையானவர் என்று கருதப்படும் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏன் வாய் திறக்காமல் அமைதி காக்கிறார்? அவரை சுயமாகச் செயல்பட விடாமல் கட்டிப் போட்டு வைத்திருப்பது யார்? எல்லாம் பல்வேறு ஊழல் முறைகேட்டுச் சேற்றில் மூழ்கி கிடக்கும் அ.தி.மு.க அரசின் “புதிய தர்பாராக” காட்சியளிக்கிறது.
ஆகவே இனியும் டி.என்.பி.எஸ்.சி.யின் இந்த தேர்வு முறைகேட்டை அ.தி.மு.க அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.சி.ஐ.டி. விசாரிப்பதில் எந்த பயனும் இருக்காது. நேர்மையாக, இரவு பகலாக படித்து தேர்வு எழுதி – ஏமாற்றம் அடைந்துள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் – டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விசாரணையை உடனடியாக சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயக்குமார் சரண்டரில் மறைந்துள்ள மர்மங்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என்று துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »