Press "Enter" to skip to content

டெல்லியை அடிச்சு தூக்கும் ஆம் ஆத்மி… வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் அதிரடி!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் கடும்குளிர் நிலவிவருவதால் காலையிலிருந்து மந்தமான  வாக்குப்பதிவே இருந்தது. பிற்பகல் 2.30-க்கு பிறகே 30 சதவீத வாக்குகள் பதிவாயின. மாலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் 57 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வாக்குப்பதிவில் சிறிது மாற்றம் இருக்கக்கூடும். இந்நிலையில் பதிவான வாக்குகள் வரும் 11-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.


இந்நிலையில், மாலை 6 மணிக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாயின. எல்லாக் கருத்துக்கணிப்புகளிலும் ஆம் ஆத்மி கட்சியே டெல்லியைத் தக்கவைத்துக்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துகணிப்பில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 44 தொகுதிகளையும் பாஜக 26 தொகுதிகளையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 53 முதல் 57 இடங்களையும், பாஜக 11 முதல் 17 இடங்களையும் காங்கிரஸ் 0 முதல் 2 இடங்களையும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.


ரிபப்ளிக் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 48 முதல் 61 தொகுதிகளையும் பாஜக 9 முதல் 21 தொகுதிகளையும் காங்கிரஸ் 0 முதல் 1 தொகுதியையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 55 இடங்களையும் பாஜக 14 இடங்களையும் காங்கிரஸ் ஓரிடத்தையும் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவி9 கருத்துகணிப்பில்  ஆம் ஆத்மி 54 தொகுதிகளையும் பாஜக 15 தொகுதிகளையும் காங்கிரஸ் 1 தொகுதியையும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் 2013, 2015 ஆகிய ஆண்டுகளைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் வென்ற பாஜக, சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கருதப்படுகிறது.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »