Press "Enter" to skip to content

ராமதாஸ், அன்புமணிக்கு பின்னாடி எவனும் போகாதீங்க! நாசம் பண்ணி விட்ருவாங்க: சாபம் கொடுக்கும் காடுவெட்டி மகன்..!

பாட்டாளி மக்கள் கட்சியில் ‘மாவீரன்’ என்ற ஒரு வார்த்தையை கேட்டால், அக்கட்சியின் இளைஞர் படை சுனாமி போல் ஆர்ப்பரிக்கும். அந்த மாவீரன்  தான் காடுவெட்டி குரு. வன்னியர் சங்க தலைவராக இருந்த இந்த குரு, கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இவரது இறப்பை பா.ம.க.வுக்கான பேரிழப்பு! என்று மற்ற கட்சிகள் குறிப்பிட்டன. ஆனால் குருவின் குடும்பமோ ’பா.ம.க. தலைவர் குடும்பத்தின் கை, எங்க குரு சாவில் இருக்குது.’ எனுமளவுக்கு பகீர் புகார்களை அள்ளிக் கொட்டினர். இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தன் அப்பாவின் இறப்புக்குப் பின் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு எதிராக துள்ளினார். அவரை ராமதாஸுக்கு வேண்டாத வன்னியர் சமுதாயத்தினர் சிலர் தூண்டுகின்றனர் என்று கொதித்தது பா.ம.க. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் குருவின் மணிமண்டப திறப்பு விழாவில் ராமாதாஸ் மற்றும் அன்புமணியோடு கனலரசனும் கலந்து கொண்டார். 

உடனே ‘கனலுக்கு கரன்ஸி கொடுத்து செட்டில் பண்ணிட்டாங்க. மாவீரன் காடுவெட்டி மகன்  மடங்கிப் போயிட்டான். கார்லாம் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணிட்டாங்க!’ என்று ஒரு விமர்சனம் எழுந்தது. ஆனால் கனலரசனோ இப்போது பா.ம.க.வுக்கு எதிராக வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறார். ’மாவீரன் மஞ்சள் படை’ எனும் அமைப்பையே உருவாக்கி,  பா.ம.க. தலைமைக்கு பெரும் குடைச்சல் கொடுக்கிறார். அவரிடம் ‘ஏன் இந்த திடீர் அமைப்பு?’ என்று கேட்கப்பட்டதற்கு “எல்லாம் வன்னியர் சமுதாய மக்களின் நலனுக்காகத்தான். ‘வன்னியர் கல்வி அறக்கட்டளை’யை ‘ராமதாஸ் கல்வி அறக்கட்டளை’ன்னு பெயர் மாற்றம் பண்ணியிருக்காங்க. எங்கப்பா மாவீரன் உசுரோடு  இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா? எங்கப்பா இறந்த சமயத்துல ‘வன்னியர் சங்கத்தின் நிரந்தர தலைவர் காடுவெட்டி குருதான்’ அப்படின்னு சொன்னாங்க. ஆனா இப்ப புதிய தலைவரா பு.தா.அருள்மொழியை கொண்டு வந்திருக்காங்க. இதெல்லாம் எங்கப்பாவின் மரியாதையை அசிங்கப்படுத்துற வேலை. 


என்னை டாக்டருக்கு படிக்க சொல்லி எங்கப்பா என்னைக்குமே சொன்னதில்லை. கலெக்டராகு, நல்ல வக்கீலாகுன்னுதான் சொல்லியிருக்கார். ஆனா இவங்களோ எங்கப்பா செத்த பிறகு ‘கனலரசனை டாக்டராக்க விரும்பிய மாவீரன்’ அப்படின்னு வதந்தியை கெளப்பிவிடுறாங்க. என்னோட கேரியரை நிர்ணயம் பண்ண இவங்க யாரு? 
வன்னியர் சமுதாய இளைஞர்களையு, பா.ம.க.வின் இளைஞர்களையும் பார்த்து நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். பா.ம.க. கட்சியை நம்பி போகாதீங்க. அந்த கட்சியை புறக்கணியுங்க. தங்களோட சுயலாபத்துக்காக நம்மை பயன்படுத்திட்டு அப்புறம் அப்படியே நடுத்தெருவிலும், நட்டாத்துலேயும் நிறுத்திட்டு போயிடுவாங்க. 
பா.ம.க.வுக்காக உழைத்து, அந்த கட்சிக்காக வழக்குகளை எதிர்கொண்டு ஜெயிலுக்கு போனவங்களின் குடும்பங்களை யாரும் கவனிக்கவேயில்லை. இதனாலதான் சொல்றேன் அந்த கட்சி வேண்டாமுன்னு. இதை புரிஞ்சுகிட்டுதான் பல இளைஞர்கள் இப்ப எங்க பக்கம் வந்துட்டிருக்காங்க.” என்று போட்டுப் பொளந்திருக்கிறார். 
காடுவெட்டி குரு மகன் இப்படி கட்சியை வெட்டுவதால் அதிர்ந்து கிடக்கிறது ராமதாஸ் வட்டாரம். 

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »