Press "Enter" to skip to content

ஈஷாவில் இந்திய யோகா சங்கத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்…! சத்குரு, ஸ்வாமி ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

ஈஷாவில் இந்திய யோகா சங்கத்தின் ஆட்சி மன்றக் குழு கூட்டம்…! சத்குரு, ஸ்வாமி ராம்தேவ் உள்ளிட்டோர் பங்கேற்பு..!

இந்திய யோகா சங்கத்தின் 2-வது ஆட்சி மன்றக் குழு கூட்டம் கோவை ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 10) சிறப்பாக நடைபெற்றது. 

இதில் இச்சங்கத்தின் தலைவரும் பதஞ்சலி யோக பீடத்தின் நிறுவனருமான ஸ்வாமி ராம்தேவ், ஆட்சி மன்ற குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ரிஷிகேஷில் உள்ள பரமர்த் நிகேதன் அமைப்பின் தலைவர் ஸ்வாமி சிதானந்த் சரஸ்வதி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆன்மீக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்களுக்கு யோகாவை அறிவியல்பூர்வமாக கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்தும், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இதற்கு ஆன்மீக அமைப்புகள் மற்றும் அரசாங்கம் எந்தவிதத்தில் தங்கள் பங்களிப்பு அளிக்க முடியும் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 
குறிப்பாக, யோகாவை மதத்துடன் தொடர்புப்படுத்தாமல், அறிவியல்பூர்வமான முறையில் உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுப்பட்டு வரும் பல முக்கிய ஆன்மீக அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றாக கூடி கலந்தாலோசிப்பதற்கு இந்த சந்திப்பு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

கூட்டத்தில் பங்கேற்க வந்த அனைவருக்கும் சத்குரு அவர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தார். அவர்கள் ஈஷாவில் உள்ள தியானலிங்கம், லிங்கபைரவி, ஆதியோகி உள்ளிட்ட இடங்களுக்கு நேற்று (பிப்.9) சென்று தரிசனம் செய்தனர்.

இந்திய யோகா சங்கம் (Indian Yoga Association) என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி யோகா அமைப்புகளின் சுய ஒழுங்குமுறைக்கான ஒரு சங்கம் ஆகும்.  ஈஷா அறக்கட்டளை, பதஞ்சலி யோக பீடம், வாழும் கலை அமைப்பு போன்ற அமைப்புகள் கோடிக்கணக்கான மக்களுக்கு யோக பயிற்சிகளை பாரம்பரிய முறையில் அர்ப்பணிப்புடன் கற்றுக்கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »