Press "Enter" to skip to content

லத்தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ் பழமையானது- குமரி அனந்தன் பேட்டி

லத்தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ் பழமையானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.

சென்னை:

உலக தாய்மொழி நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்த்தாய் உருவ படத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலகத்தில் உள்ள தாய்மொழிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் பிப்ரவரி 21-ந் தேதி உலக தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலக அளவில் புழக்கத்தில் இருந்த தாய்மொழிகள் 7006 என்றும் தாய்மொழிகளை காப்பாற்றவில்லை என்றால் 21-ம் நூற்றாண்டுக்குள் 300 மொழிகள் தான் இருக்கும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் மொழிதான். சிலர் லத்தீன், கிரேக்க மொழிகள் தான் மூத்த மொழி என்பார்கள். ஆனால், இந்த லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் தலா ஆயிரம் தமிழ் சொற்கள் இருக்கின்றன என்று சிவகாசியை சேர்ந்த அருணகிரி என்ற தமிழ் பேராசிரியர் ஆய்வு செய்து தெரிவித்து உள்ளார். அப்படியானால் லத்தீன், கிரேக்க மொழிகளை விட தமிழ்தானே பழைய மொழி.

அதேபோன்று, தமிழக கோவில்களில் தமிழில் வழிபாடு செய்யலாமே என்று நான் சட்டசபையில் எழுப்பிய கேள்விக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மகராஜன் தலைமையிலான குழு ஆய்வு செய்து 1311-ம் ஆண்டு வரை தமிழகத்தில் உள்ள கோவில்களில் எல்லாம் தமிழ் மொழியில் தான் வழிபாடு நடந்தது என்று தெரிவித்து இருந்தார். அதே போன்று சங்க இலக்கியத்தில் சாதி என்ற சொல்லே இல்லை. இது போன்ற தமிழர்கள் பெருமையை நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »