Press "Enter" to skip to content

கொரோனா பீதி… சீனாவில் இருந்து வந்தவர்களின் பேருந்து மீது உக்ரைனில் தாக்குதல்

கொரோனா அச்சம் காரணமாக, சீனாவில் இருந்து உக்ரைனுக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பயணித்த பேருந்துகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கீவ்:

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2345 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அந்தந்த நாடுகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு அழைத்து வரப்படும் மக்கள், தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள வுகான் நகரில் இருந்து 45 உக்ரைன் நாட்டவர்கள் மற்றும் மற்ற நாடுகளைச் சேர்ந்த 27 பேர் வியாழக்கிழமை உக்ரைனுக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களை தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைப்பதற்காக, நோவி சான்ஷாரியில் உள்ள மருத்துவ முகாமிற்கு பேருந்தில் அழைத்து சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் அந்த பேருந்துகளை சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தினர். கற்களையும் தீப்பந்தங்களையும் எறிந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டக்காரர்களிடம் இருந்து பேருந்துகளை மீட்டு, அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் இருந்து வந்தவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வந்த போலி இ-மெயில் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என கூறப்படுகிறது. சீனாவில் இருந்து வந்த மக்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்றும் எதிர்ப்பை தவிர்க்க வேண்டும் என்றும் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுடன் தான் தங்கவிருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.

போலி இ-மெயிலை அனுப்பிய நபர்கள் குறித்து உக்ரைன் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உக்ரைனில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »