Press "Enter" to skip to content

சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றிய டிரம்ப்… விளக்கம் அளித்த மோடி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், முதல் பயணமாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தார்.

அகமதாபாத்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்.  

வாஷிங்டன் நகரில் இருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானம் மூலம் நேற்று புறப்பட்ட டிரம்ப், இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். பிரதமர் மோடி, விமான நிலையத்துக்கு நேரில் வந்து டிரம்ப் தம்பதியரை வரவேற்றார். 

பின்னர் அங்கிருந்து சாலை மாக்கமாக சபர்மதி ஆசிரமத்திற்கு டிரம்ப் சென்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் வரையிலான 22 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து டிரம்புக்கு ஆரவார வரவேற்பு அளித்தனர். வழியில் 30-க்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு இந்தியாவின் கலாசாரத்தை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

இந்த பிரமாண்ட வரவேற்பு மற்றும் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசித்தபடி டிரம்ப் தம்பதியர் சபர்மதி ஆசிரமத்தை அடைந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். டிரம்ப் மற்றும் மெலனியாவுக்கு கதர் துண்டு அணிவித்து வரவேற்ற மோடி, உள்ளே அழைத்துச் சென்று ஆசிரமத்தை சுற்றிக் காட்டினார். ஆசிரமத்தில் மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு டிரம்பும் மோடியும் மரியாதை செலுத்தினர். 

ஆசிரமத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டையை டிரம்ப் பார்வையிட்டார். அந்த ராட்டையில் நூல் நூற்பது குறித்து டிரம்பிடம் நிர்வாகிகள் விளக்கி கூறினார்கள். அதன்படி டிரம்பும் மெலனியாவும் ராட்டையை சுழற்றி, நூல் நூற்க முயற்சி செய்தனர். பிரதமர் மோடி அவர்களுக்கு ராட்டையின் செயல்பாடு குறித்து விளக்கம் அளித்தார். 

ஆசிரமத்தில் இருந்த 3 குரங்கு பொம்மைகளை டிரம்புக்கு காட்டி மோடி விளக்கினார். பார்வையாளர் பதிவேட்டில் டிரம்ப், மெலனியா இருவரும் கையெழுத்திட்டனர்.

சபர்மதி ஆசிரம நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறும் மோதிரா ஸ்டேடியத்திற்கு டிரம்ப் புறப்பட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »