Press "Enter" to skip to content

நவாஸ் ஷெரீப் ஜாமீனை நீட்டிக்க முடியாது – பாகிஸ்தான் மாகாண அரசு அதிரடி

லண்டனில் சிகிச்சை பெற்று வரும் நவாஸ் ஷெரீப் ஜாமீனை நீட்டிக்க முடியாது என பாகிஸ்தான் மாகாண அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

லாகூர்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரை, லண்டனில் உள்ள, ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சையளிக்க அனுமதிக்கக்கோரி அவரது குடும்பத்தினர் கோர்ட்டை நாடினர்.

அதனை தொடர்ந்து, லாகூர் ஐகோர்ட்டு நவாஸ் ஷெரீப்புக்கு 4 வாரம் ஜாமீன் வழங்கியதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் அவர் லண்டன் சென்றார். அதன் பிறகு டிசம்பர் 23-ந்தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவாஸ் ஷெரீப்புக்கு மேலும் 4 வாரம் ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

அதே சமயம் இனியும் மேற்கொண்டு ஜாமீனை நீட்டிக்க வேண்டுமானால் நவாஸ் ஷெரீப்பின் மருத்துவ அறிக்கைகளை பஞ்சாப் மாகாண அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென லாகூர் ஐகோர்ட்டு தெரிவித்தது.

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பின் ஜாமீனை மேலும் நீட்டிக்க முடியாது என பஞ்சாப் மாகாண அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மந்திரி சபையின் கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாகாண சட்ட மந்திரி ராஜா பஷாரத் கூறினார்.

இது பற்றி அவர் கூறுகையில், “லண்டனில், நவாஸ் ஷெரீப் சிகிச்சை பெறுவதற்கான எந்த ஆதாரத்தையும், அவரது குடும்பத்தினர் வழங்கவில்லை. அவர், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளாரா என்பது கூட, உறுதி செய்யப்படவில்லை. எனவே, அவரது ஜாமீனை நீட்டிக்க முடியாது” என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »