Press "Enter" to skip to content

ஈரானில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) வேகமாக பரவுவது ஏன்?

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இந்த வைரஸ் ஏன் வேகமாக பரவுகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

டெஹ்ரான்:

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்த படியாக ஈரான் நாட்டில்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 10 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், 1 மணி நேரத்திற்கு 50 பேர் வைரசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, சீனாவில் இருந்து வரும் விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் அரசு தடை விதித்தது. ஆனால் அங்குள்ள தனியார் விமான நிறுவனமான ‘மஹான் ஏர்’ மட்டும் தொடர்ந்து தனது சேவையை சீனாவிற்கு அளித்து வருகிறது.

இந்த விமானத்தின் விமானிகளில் ஒருவர் சீனா சென்றுவந்தபோது கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் காரணமாக இறந்துவிட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்கா விடுத்துள்ள பொருளாதாரத் தடையால் மருத்துவபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஈரான் தவித்து வருகிறது. பொருளாதார தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் கடந்த 13-ந் தேதி ஈரான் அதிபர் ரவ்ஹானி, ஐ.நா. பொதுச்செயலாளருக்கு கடிதமும் எழுதினார்.

மேலும், ஈரான் நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ பணியாளர்கள் குறைவாகவே உள்ளனர். அங்கு முககவசங்கள், கையுறைகள், சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவ பரிசோதனை நிலையங்களும் போதுமான அளவில் இல்லை.

இதனால் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு உதவ முன்வர வேண்டுமென்று ஈரான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரான் நாட்டில் ‘நவ்ருஸ்’ புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது. வழக்கமாக புத்தாண்டில் அந்த நாட்டு மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது. இதனால் சில இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களையிழந்து காணப்பட்டது.

எனினும் பல நகரங்களில் வழக்கம்போல் மக்கள் பொது இடங்களில் கூடினர். அங்குள்ள காஸ்பியன் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இது போன்ற காரணங்களால் ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெரும் உயிர்ப்பலி ஏற்பட்டும் ஈரான் மக்கள் கொரோனா வைரஸ் பற்றி போதிய விழிப்புணர்வை பெறவில்லை என்றே கருதப்படுகிறது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »