Press "Enter" to skip to content

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள் – பிரதமர் மோடி கருத்து

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களே மதிப்புமிக்க வீரர்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி:

மக்கள் ஊரடங்குக்கு நாட்டு மக்கள் அளித்த ஒத்துழைப்பால் பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி கிடந்த வீடியோக்களை தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டு சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும்தான் மதிப்புமிக்க வீரர்கள். உங்களின் எச்சரிக்கையும், உஷார் நிலையும்தான் லட்சக்கணக்கானவர்களின் உயிரை பாதுகாக்கும்.

இன்றைய (நேற்று) ஊரடங்கு இரவு 9 மணியுடன் முடியலாம். ஆனால் இதை கொண்டாட வேண்டும் என்று அர்த்தம் அல்ல. இதை ஒரு வெற்றியாக கருதக்கூடாது. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடக்கமாகவே கொள்ள வேண்டும்.

சமூக விலகலை உறுதி செய்வதற்கு இதுவே தகுந்த தருணம். மக்கள் ஊரடங்கால் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியும், தொலைக்காட்சி பார்க்கவும், நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ளவும் முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான பணிகளில் ஈடுபட்டிருப்போரை ஊக்குவிக்கும் வகையில் நாட்டு மக்கள் தங்கள் கைகளை தட்டி பாராட்டு தெரிவித்து இருந்ததற்கும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக மக்கள் ஊரடங்கு தொடங்குவதற்கு முன் நேற்று காலையில் தனது டுவிட்டரில் அவர் கூறுகையில், ‘இன்னும் சில நிமிடங்களில் மக்கள் ஊரடங்கு தொடங்க இருக்கிறது. இதில் அனைவரும் பங்களிப்போம். கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்துக்கு இது மிகச்சிறந்த வலிமையை தரும். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »