Press "Enter" to skip to content

கொரோனாவை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறோம்- அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.

சென்னை:

தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா நோய் பாதிப்பு அறிகுறியும் பருவகால புளு காய்ச்சல் தாக்குதல் அறிகுறியும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன. எனவே இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டாலும், பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியமாகும்.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நோயை எதிர்கொள்ள எல்லா நிலையிலும் தயார் நிலையில் இருக்கிறோம்.

இந்த நோய் ஒருவரிடத்தில் இருந்து ஒருவருக்கு பரவி விடக்கூடாது என்பது மிக முக்கிமானது ஆகும். எனவே அதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம். 8 இடங்களில் பரிசோதனை மையம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு தனி வார்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்திய நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்களிடம் பெற்ற தகவல்படி அடுத்த 2 மாதத்திற்கு சிக்கலான கால கட்டமாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இது நமக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.

ஆனாலும் சூழ்நிலையை சமாளிக்கும் அளவுக்கு நாம் எல்லாவற்றையும் தயார்படுத்தி உள்ளோம். தற்போது இந்த நோயாளிகளுக்கு குளோரோகுயின், அஷித்ரோமிஷின் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவற்றை தயாராக வைத்திருக்கிறோம். 1½ லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருந்துகள் தயாராக இருக்கின்றன. 1690 சுவாச கருவிகள் இப்போது பயன்பாட்டில் உள்ளன.

இன்னும் 1000 கருவிகள் வாங்கப்பட இருக்கிறது. அடுத்த வாரத்தில் இது வந்துவிடும். 40 லட்சம் மூன்றடுக்கு முக கவசம், 2 லட்சம் ‘எண் 95’ முக கவசம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 500 டாக்டர்கள், 1000 நர்சுகள், 1500 ஆய்வுகூட தொழில்நுட்ப ஊழியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

10 ஆயிரம் போர்வைகள் வாங்கி உள்ளோம். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் சமீபத்தில் திறக்கப்பட்ட கட்டிடங்களை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றி இருக்கிறோம்.

சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 3-வது டவர் முழுவதும் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுளளது. தற்போது 4250 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். தனிமை சிகிச்சைக்காக 1160 படுக்கைகள் இருந்தன. இப்போது அது 5800 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நோய் தொடர்பாக தவறான வந்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்கள். இவ்வாறு செய்யாமல் பொறுப்புடன் மக்கள் நடந்து கொள்ள வேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து பரவிவிடாமல் தடுக்க எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »