Press "Enter" to skip to content

புதுச்சேரியில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு- மதுபானக் கடைகள் மூடல்

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் இன்று இரவு முதல் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

புதுச்சேரி:

உலகை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் மனித சமுதாயம் திணறி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் மருந்துகள் இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

கைகளை அடிக்கடி கழுவுதல், முக கவசம் அணிதல், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் சமூக தொற்று பெருமளவில் குறைக்கப்படுகிறது. 

அவ்வகையில்  புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதில் அலட்சியமாக இருப்பதால், ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 

‘போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அவசியமின்றி பைக்கில் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

இன்று மாலை முதல் மார்ச் 31ம் தேதி வரை அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும். தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது’ என நாராயணசாமி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »