Press "Enter" to skip to content

பரிசோதனைக்கு சென்ற மருத்துவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்த வன்முறை கும்பல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா குறித்த பரிசோதனைக்கு சென்ற டாக்டர்கள் மீது, கற்களை வீசி தாக்கி விரட்டியடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தூர்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுகாதாரத் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து களப்பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்கின்றனர். 

ஒரு சில இடங்களில் மருத்துவர்களின் பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுப்பதுடன், அவர்களை தாக்கவும் செய்கின்றனர். பரிசோதனைக்கு வரும்படி அறிவுறுத்தினாலும், நோயின் தீவிரத்தை அறியாமல் அலட்சியமாக இருப்பதுடன், அரசாங்கத்தை குறை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.  

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் தாட் பட் பகுதியில் உள்ள மக்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறதா? என டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். 3 டாக்டர்கள் மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் என 5 பேர் அங்குள்ள மக்களிடம், காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இது அங்கிருந்தவர்களை ஆத்திரமடையச் செய்தது. டாக்டர்கள் மீது பெரிய கற்கள் மற்றும் கம்புகளை வீசி தாக்கி விரட்டியடித்தனர். வன்முறைக் கும்பலிடம் இருந்து சுகாதாரக் குழுவினரை போலீசார் மீட்டனர். அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறைக் கும்பல் தாக்கியதில் 2 பெண் டாக்டர்கள் பலத்த காயமடைந்தனர். 

டாக்டர்களை குறுகலான தெருவில் அந்த கும்பல் துரத்தி தாக்குவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களின் கடமையை அவமதிப்பதுடன், வைரஸ் பெருந்தொற்று பரவ வழிவகுப்பதாகவும் அமைந்துள்ளது. 

மத்திய பிரதேசத்தில் 90க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »