Press "Enter" to skip to content

தடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும்- முதலமைச்சர் எச்சரிக்கை

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள தடையை மீறி வெளியே வந்தால் 144 உத்தரவு கடுமையாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை:

சென்னை ஆர்.ஏ.புரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாய நல கூட்டத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது. 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர்.

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தை பற்றி தெரியாமல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர். கொரோனா பரவாமல் தடுக்க மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

மக்களை துன்புறுத்த 144 தடை உத்தரவு போடவில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே போடப்பட்டது. மக்கள் வெளியே சுற்றுவது அதிகரித்தால் 144 தடை உத்தரவை கடுமையாக்க நேரிடும். அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கை மீறினால் சட்டம் தன் கடமையை செய்யும்

இந்த மாதம் இறுதி வரை இலவச ரேசன் பொருள்கள் வழங்கப்படும். மேலும் டோக்கன் வழங்கப்படும் போதே நிவாரண தொகையான ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

தமிழக அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »