Press "Enter" to skip to content

சைரன் விளக்கு பொருத்திய கார்… காவல் துறை என ஸ்டிக்கர்… டெல்லியை சுற்றிய நபர்

ஊரடங்கின் போது சைரன் விளக்கு பொருத்திய காரில் போலீஸ் என ஸ்டிக்கர் ஒட்டி ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி டெல்லியை சுற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.

புது டெல்லி:

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 

நாடு முழுவதும் இதுவரை 9 ஆயிரத்து 152 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 308 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 856 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதனால், அத்தியாவசிய காரணங்கள் அன்றி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால், சிலர் உரிய காரணம் இன்றி வீடுகளை விட்டு வெளியே வந்தும், சாலைகளில் வாகனங்களை ஓட்டியும் ஊரடங்கை மீறி செயல்பட்டு வருகின்றனர். 

அவர்களை வாகனச்சோதனைச்சாவடிகளில் வைத்து பிடிக்கும் போலீசார் அபராதம் விதித்தும், எச்சரித்தும் அனுப்புகின்றனர். மேலும், சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. கைது நடவடிக்கைகளுக்கு உள்படுத்தப்படுகின்றனர். 

இத்தனை கடுமையான நடவடிக்கைகள் எடுத்த போதும் சிலர் ஊரடங்கை மீறும் செயல்களில் வழக்கமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள கேஷவ்புரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் வாகனச்சோதனைச்சாவடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு  சைரன் விளக்குடன் டெல்லி போலீஸ், இந்திய அரசாங்கம் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்த ஒரு காரை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.

அப்போது, அந்த காரை ஓட்டி வந்த ஆதித்யா குப்தா(29) தான் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எனவும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்வதாக கூறினார். 

இதையடுத்து, அவரிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதற்கான அடையாள அட்டையை காண்பிக்கும் படி போலீசார் கேட்டனர். ஆனால், ஆதித்யா தன்னிடம் தற்போது அடையாள அட்டை இல்லை என முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். 

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையின் போது ஆதித்யா குப்தா டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும், உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்துவரும் ஐ.ஏ.ஏஸ் அதிகாரி போல் நடித்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தில் வேலை செய்வதாக கூறி ஊரடங்கு காலத்தில் டெல்லி முழுவதும் காரில் சுற்றித்திரிந்த ஆதித்யா குப்தா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »