Press "Enter" to skip to content

ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி அளித்தது மத்திய அரசு

ஏப்ரல் 20-ந்தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ‘‘வருகிற 20-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் ஏப்ரல் 20-க்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு. அதேவேளையில் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஊரடங்கு உத்தரவு கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்’’ எனத் தெரிவித்தார்.  ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அதன்படி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் ஏப்ரல் 20-ந்தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும். எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர் வேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம்.

மேலும் சிறு, குறு தொழில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »