Press "Enter" to skip to content

ஊரடங்கு கெடுபிடி… உடல்நலம் பாதித்த தந்தையை ஒரு கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகன்

ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனலூர்:

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த 65 வயது முதியவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை, மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், ஆட்டோவை வீட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே போலீசார் தடுத்து நிறுத்தினர். ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக அந்த இடம் வரை மட்டுமே ஆட்டோ செல்ல அனுமதிக்கப்படும் என கூறினர். 

இதனையடுத்து வேறு வழியில்லாததால், நடக்க முடியாத நிலையில் இருந்த 65 வயது நபரை, அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார். அப்போது அவரது தாயாரும் நடந்தே உடன் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

ஊரடங்கு விதிமுறைகளை காரணம் காட்டி ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டாலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வதற்கு ஆட்டோவை அனுமதித்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »