Press "Enter" to skip to content

ரேஷனில் இலவச அரிசி வாங்க காத்திருந்த பெண் மாரடைப்பால் மரணம் – உ.பி.யில் சோகம்

உத்தரபிரதேசத்தில் ரேஷன் கடையில் இலவச அரிசி வாங்க காத்திருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே மாதம் 3-ம் தேதி வரை அமலில் படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானிய பொருட்கள் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் இலவசமாக வழங்கி வருகிறது.

போதிய வருமானம் இல்லாமல் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற சூழ்நிலை நிலவி வருவதால் ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டம் பிரகலாத்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மைகு அலி. இவரது மனைவி ஷமீம் பனோ (35). 

பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இவர்களது குடும்பம் ஊரடங்கு காலத்தில் அம்மாநில அரசு வழங்கும் இலவச அரிசியை நம்பியே இருந்தது. 

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை ரேஷன் கடையில் இலவசமாக அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்பட உள்ளது என்ற தகவலையடுத்து ஷமீம் தனது கிராமத்திற்கு அருகே உள்ள ரேஷன் கடைக்கு நடந்தே சென்றுள்ளார்.

சுமார் 3 மணி நேரம் நடந்து சென்று ரேஷன் கடையை அடைந்த அவர் கூட்டம் காரணமாக தானியங்களை வாங்க நீண்ட வரிசையில் காத்து கிடந்துள்ளார். கடுமையான வெளியில் மூன்று மணி நேரம் நடந்து பின்னரும் வெளியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஷமீம் திடீரென நிலை குலைந்து கீழே விழுந்தார். 

இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷமீமை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக அரசு வழங்கும் இலவச அரிசியை வாங்க காத்திருந்த பெண் வரிசையில் நின்று கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »