Press "Enter" to skip to content

ராஜஸ்தானில் ரேபிட் கிட் பரிசோதனை நிறுத்தம்- தவறான முடிவுகளை காட்டியதால் அரசு நடவடிக்கை

ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை துரிதமாக கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனை நிறுத்தப்பட்டது.

ஜெய்ப்பூர்:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பரிசோதனையை துரிதப்படுத்துவதற்காக ரேபிட் கிட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கருவிகள் மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு பரிசோதனை தொடங்கி உள்ளது. இந்த கருவிகள் மூலம் உடனடியாக வைரஸ் தொற்றை கண்டறிய முடியும்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. ரேபிட் கிட்டில் தவறான முடிவுகள் வெளியானதால் பரிசோதனை நிறுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. 

இதுபற்றி ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா கூறியதாவது:-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் (ஐசிஎம்ஆர்) இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை பெற்றோம். இது ராஜஸ்தானில் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம் நடத்தப்படும் சோதனைகள் பயனுள்ளதா என்பதை அறிவதற்கு, எங்கள் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் மற்றும் எங்கள் மருத்துவத் துறைத் தலைவர் கொண்ட குழுவை அமைத்தோம். 

ரேபிட் டெஸ்ட் கிட்  பரிசோதனை முடிவுகள் 90 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும், ஆனால் அது 5.4 சதவீதம் மட்டுமே இருந்தது. சரியான நடைமுறையை பின்பற்றியே இந்த கருவிகளை பயன்படுத்தினோம். ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்களையும் பின்பற்றினோம். ஆனால் அந்த கருவி இன்னும் தரத்தை பூர்த்தி செய்யவில்லை. எனவே சோதனைகளை நிறுத்தினோம்.

கருவியின் துல்லியத்தன்மை கேள்விக்குரியதாக இருப்பதால் நாங்கள் பரிசோதனையை நடத்த மாட்டோம் என்று ஐ.சி.எம்.ஆருக்கு தகவல் அனுப்பி உள்ளோம். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »