Press "Enter" to skip to content

கொரோனா இல்லாத மாநிலமாக மாறிய திரிபுரா

கொரோனா சிகிச்சை பெற்று வந்த இருவரும் வைரசில் இருந்து குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாநிலமாக திரிபுரா மாறியுள்ளது.

அகர்டலா:

இந்தியாவில் 21 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 325 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு நாடு முழுவதும் இதுவரை 686 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மே 3 -ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வைரசின் தாக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், திரிபுரா மாநிலத்தில் 2 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்தது. அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.  

இந்நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் தற்போது வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பிப்லாப் குமார் டேப் தெரிவித்துள்ளார். 

வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் கடந்த 6-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யபட்ட நிலையில் எஞ்சிய இரண்டாவது நபரும் நேற்று வைரசில் இருந்து குணமடைந்துள்ளார்.

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் முதல் மந்திரி தெரிவித்துள்ளார். மேலும், திரிபுரா மாநிலத்தில் 111 பேர் கொரோனா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், 227 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல் மந்திரி குமார் டேப் தெரிவித்துள்ளார்.

திரிபுராவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »