Press "Enter" to skip to content

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு தொடர் வண்டிகள் – உள்துறை அமைச்சகம் அனுமதி

வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு சிறப்பு ரெயில்களை இயக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  ஊரடங்கு காரணமாக பொதுப் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. 

இதனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். தங்கும் இடம், உணவு உள்ளிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வழியின்றி தவித்து வருகின்றனர்.

இதேபோல், ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்கள், பிற நோக்கங்களுக்காக வெளி மாநிலம் சென்றவர்களும் ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. 

சில இடங்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, மகாராஷ்டிராவில் இந்தப் பிரச்சனை அதிகளவு காணப்பட்டது.

ஊரடங்கில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே, வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊர் செல்ல மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்கு சிறப்பு ரெயில்களை இயக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரெயில்களை இயக்கி கொள்ளலாம்.

இடம் பெயரும் நபர்களுக்கு உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அறிகுறியற்றவர்களை மட்டுமே இடம் பெயர அனுமதிக்க வேண்டும்.

இடம் பெயரும் நபர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்த வலியுறுத்த வேண்டும். அவர்களின் உடல் நலம்  கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »