Press "Enter" to skip to content

வென்டிலேட்டர் வாங்கியதில் ஊழல் – சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை

கொரோனா சிகிச்சைக்கு முக்கிய கருவியாக இருக்கும் வென்டிலேட்டர் வாங்குவதில் ஊழலில் ஈடுபட்ட பொலிவியா நாட்டின் சுகாதாரத்துறை மந்திரிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூக்ரே:

உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி மிகவும் முக்கியமான மருத்துவ உபகரணமாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா வேகமாக பரவி வருவதால் வெண்டிலேட்டரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆகையால், உலகின் பல்வேறு நாடுகள் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் நாடுகளிடமிருந்து அதை கொள்முதல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவிலும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 6 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு அங்கு இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா சிகிச்சையின் அங்கமான செயற்கை சுவாசக்கருவி எனப்படும் வெண்டிலேட்ரை ஸ்பெயினிடம் இருந்து வாங்க பொலிவியா முடிவு செய்தது. இதற்காக முதல் கட்டமாக 170 வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி வென்டிலேட்டர்கள் கொள்முதலின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டாலர்கள் ஆகும். மேலும், சராசரியாக ஒரு வெண்டிலேட்டருக்கு தலா 27 ஆயிரத்து 683 டாலர்கள் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கொள்முதல் அந்நாடு சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்ஸ் தலைமையில் நடைபெற்று பணமும் ஸ்பெயின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட வென்டிலேட்டர்கள் உலக சுகாதார அமைப்பின் தர நிர்ணய அளவுகோளை பூர்த்தி செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. 

மேலும், வெண்டிலேட்டரின் உணமை மதிப்பு 7 ஆயிரத்து 194 டாலர்கள் என்பதும் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிக விலைக்கு பொலிவிய அரசு வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்திருப்பதை அந்நாட்டு ஊடகங்கள் கண்டுபிடித்தன.

மார்சிலே நவஜென்ஸ்

இந்த தகவல் வெளியானதையடுத்து அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வென்டிலேட்டர் கொள்முதலுக்கு தலைமை ஏற்ற சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்சின் பதவியை அந்நாடு அதிபர் பறித்தார். மேலும், ஊழல் செய்த குற்றத்திற்காக நவஜென்ஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த ஊழல் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் மார்சிலே நவஜென்ஸ் வென்டிலேட்டர் வாங்குவதில் ஊழல் செய்தது நிரூபணம் ஆனது. 

இதையடுத்து வென்டிலேட்டர் கொள்முதலில் ஊழல் செய்த குற்றத்திற்காக நவஜென்சுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. 

இந்த விவகாரத்தில் பொலிவியா முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி மார்சிலே நவஜென்ஸ் மற்றும் அவருக்கு உதவி செய்த அதிகாரிகள் உள்பட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »