Press "Enter" to skip to content

உத்தர பிரதேசத்தை தாக்கியது வெட்டுக்கிளிகள் கூட்டம்- அழிக்கும் நடவடிக்கை தீவிரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கியிருப்பதால், அவற்றை அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜான்சி:

இந்தியாவின் வடமேற்கு மாநில விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அழிவை ஏற்படுத்திவருகிறது. பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதல் ஏற்படக் கூடும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது.

இதனால் வெட்டுக்கிளிகளை ஒழிக்க, அனைத்து மாநிலங்களிலும் வேளாண் துறை உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின், பல்வேறு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன. மத்திய வேளாண் அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டுள்ள ட்ரோன்கள் மூலம், விவசாய நிலத்தில் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை அழித்துவருகின்றனர்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கத் தொடங்கி உள்ளது. இரண்டு கிராமங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்க வேளாண்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். குறிப்பாக இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வெடுக்கும் போது மருந்து தெளித்து அவற்றை அழித்துவருகின்றனர்.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஆண்ட்ரே வம்சி கூறுகையில், ‘வெட்டுக்கிளிகளின் கூட்டம் ஜான்சியைத் தாக்கியது. வெட்டுக்கிளிகளை அழிக்க தஹ்ராலி பகுதியில் உள்ள 2 கிராமங்களில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.

பகல் நேரங்களில் வெட்டுக்கிளிகளை விரட்டியடிக்க அதிக சப்தம் எழுப்பும்படி  விவசாயிகளை அறிவுறுத்தி உள்ளோம். அத்துடன் இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் எந்த பகுதியில் ஓய்வெடுக்கின்றன என்பது பற்றி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருக்கிறோம்’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »