Press "Enter" to skip to content

உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை- ராகுல் காந்தி

கொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

புதுடெல்லி:

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார்.

அப்போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக மீண்டும் கூறினார்.

ராகுல் காந்தி மேலும் பேசியதாவது:-

இதுபோன்று உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை. அப்போது கூட அனைத்தும் திறந்திருந்தன என்று நினைக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய பேரழிவு.

இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து தான், ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என கூறுகிறேன். உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. அத்துடன் பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப்போகிறது.

இவ்வாறு ராகுல் பேசினார்.

இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு, கடுமையானது என்றும், உலகில் இதுபோன்று எங்கும் இருந்ததாக கேள்விப்பட்டதில்லை என்றும் ராஜீவ் பஜாஜ் குறிப்பிட்டார்.

‘மக்கள் பிரதமரை பின்தொடர்கிறார்கள். எனவே, மக்களின் மனதில் இருந்து பயத்தை போக்க பிரதமர் முயற்சிக்க வேண்டும். இப்படித்தான் நாம் முன்னேறப் போகிறோம், எல்லாம் நம் கட்டுப்பாட்டில் உள்ளது, தொற்றுநோய்களுக்கு அஞ்சாதீர்கள், இப்போது முன்னேற வேண்டும் என பிரதமர் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் அளிக்க வேண்டும்’ என்றும் ராஜீவ் பஜாஜ் பேசினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »