Press "Enter" to skip to content

11 மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பினார் முதலமைச்சர்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்காக, நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிக்குழு அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது உலகளவில் மோட்டார் வாகனத்துறையில் தலைசிறந்த 11 முன்னிலை பெற்றுள்ள நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவல், உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அம்முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர், ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு’ என்ற குழுவை தலைமை செயலாளர் தலைமையில் அமைத்துள்ளார்.

சமீபத்தில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டிற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ‘வோக்ஸ் வேகன்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹெர்பர்ட் டையஸ், ‘ஸ்கோடா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பெர்ன்ஹார்டு மையர், ‘மெர்சிடஸ் பென்ஸ்’ நிறுவன தலைவர் ஓலா கல்லேனியஸ், ஆடி கார் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மார்கஸ் டியூஸ்மன், ‘ஹோண்டா’ நிறுவனத்தின் தலைவர் டகாஹிரோ ஹச்சிகோ, ‘டொயோடோ’ நிறுவனத்தின் தலைவர் அக்கியோ டொயோடா, பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைவர் ஆலிவர் ஜிப்ரே, ‘லக்ஸ்ஜென் டயோயுவான்’ மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஹூ ஹை சாங், ‘ஜாக்குவார் லேண்ட்ரோவர்’ நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ரால்ப் டி. ஸ்பெத், ‘ஜென்ரல் மோட்டார்ஸ் மற்றும் செவர்லெட்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மேரி டி.பர்ரா மற்றும் ‘டெஸ்லா’ நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் எலோன் மஸ்க் ஆகிய 11 முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்- அமைச்சர் அவர்கள் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும் சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »