Press "Enter" to skip to content

கீழடி அகழ்வாராய்ச்சி முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது- அமைச்சர் பாண்டியராஜன்

கீழடி அகழ்வாராய்ச்சி முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பூந்தமல்லி:

கொரோனா வைரஸ் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. இதனால் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் தினந்தோறும் வழங்கப்பட்டு வந்த அன்னதானம் நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று முதல் நூறு பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் திருவேற்காடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு கடந்த இரு வாரங்களாக கீழடியில் மிகப்பெரிய ஆய்வு நடைபெற்று வருகிறது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வு செய்து வருகிறோம். தற்போது மிக முக்கிய கட்டத்தில் ஆய்வு வந்திருக்கிறது. பெரிய மாட்டு இனத்தை சேர்ந்த 80 சென்டி மீட்டர் நீளத்தில், 75 சென்டி மீட்டர் அகலத்தில் விலங்கு ஒன்றின் முதுகின் ஒரு அங்கம் கிடைத்துள்ளது.

அது திமில் படைத்த எருது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு என்பது நீண்ட காலத்துக்கு முன்பே இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

கீழடியை தொடர்ந்து கொர்த்தகை, மணவூர், சிவகலை, கொடுமணல் ஆகிய 4 கிராமங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கொர்த்தகையில் மிக முக்கிய கண்டுபிடிப்பாக முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடி ஆகழாய்வு நான்காவது கட்ட கண்டுபிடிப்புகள் எப்படி உலகம் முழுவதும் பேசப்பட்டதோ, அதேபோல் இங்கேயும் முக்கியமான கண்டுபிடிப்புகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சமூக விலகளை முறையாக கடைபிடித்து, போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் ஆய்வு நடந்து வருகிறது. உலக நாடுகளில் உள்ள பல அமைப்புகளை இங்கு ஒருங்கிணைத்து உள்ளோம். உலகத்தமிழர்கள் மத்தியில் எழுச்சி மிகுந்த எதிர்பார்ப்பு கீழடி, ஆதிச்சநல்லூர் பற்றி உள்ளது. அதற்கு சமமாக சிவகலை, கொடுமணல் பகுதியில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை கொண்டு வரும் என நம்புகிறோம். தமிழர் வரலாற்றை மீள் உருவம் செய்ய இது முக்கியமானதாக இருக்கும் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »