Press "Enter" to skip to content

தமிழகத்தில் கோவில்களை திறக்க தடை நீட்டிப்பு- அறநிலையத்துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் கோவில் நடை திறப்புக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தமிழக அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை:

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச். 25-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் நடைகளும் சாத்தப்பட்டன. இந்தநிலையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து காணப்படுவதால், அங்கு சில நிபந்தனைகளுடன் பல்வேறு பணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் கோவிலுக்கு சென்றால், அமைதி கிடைக்கும் என நம்புவதால் பக்தர்களும், சமய தலைவர்களும் கோவில்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல், வழிபாட்டு தலங்களை திறக்க, மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை-திருப்பதி வெங்கடேசபெருமாள் கோவிலில் 10-ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு, உள்ளுர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். தொடர்ந்து 11-ந்தேதி முதல் பிற மாநில பக்தர்களும் அங்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அவர்கள் இ-பாஸ் பெற்று வர வேண்டும். அந்தவகையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதேபோல் கேரள மாநிலத்தில் உள்ள கோவில்கள் அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது.

மாதம் 5 நாட்கள் திறக்கப்படும் சபரிமலை அய்யப்பன் கோவில் வருகிற 14-ந்தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதுதவிர கர்நாடக மாநிலம் தர்மசாலா உள்ளிட்ட அனைத்து கோவில்களும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. அதேபோல் புதுச்சேரியில் உள்ள வேதபுரீசுவரர் கோவில், மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் இன்று திறக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் கோவில்களை திறப்பது தொடர்பாக தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் கடந்த 3-ந்தேதி அனைத்து சமய தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தமிழகத்தில், வழிபாடு தலங்களை இன்று (8-ந்தேதி) திறக்கலாமா?, திறந்தால் எந்த மாதிரியான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து கருத்துக்களை கேட்டார். இந்த கூட்டத்தில், இந்து, கிறிஸ்தவம், முஸ்லிம், ஜெயின், சீக்கிய சமய உள்ளிட்ட 34 சமய பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறினார்கள்.

இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது வரை கோவில்கள் திறப்பு குறித்து அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை. எனவே கோவில்கள் திறப்புக்கான தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எப்போது திறக்கப்படும் என்பதை முறையாக முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »