Press "Enter" to skip to content

கொரோனா உச்ச நிலையை அடையலாம், பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான நேரம்- தமிழக அரசு வாதம்

தமிழகத்தில் வரும் மாதங்களில் கொரோனா உச்ச நிலையை அடையலாம் என்பதால், பொதுத்தேர்வை நடத்த இதுவே சரியான நேரம் என ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதிட்டது.

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வை நடத்துவதில் அவசரம் காட்டும் அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அரசு தலைமை வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு வர முடியாது என்பதால் வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கும்படி அரசுத் தரப்பில்  கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. 10ம் வகுப்பு தேர்வு குறித்து உடனடியாக முடிவு எடுக்க வேண்டும், தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என கண்டிப்புடன் கூறினர். அரசு தலைமை வழக்கறிஞர் வராவிடில் தேர்வை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என கூறி விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.

அதன்படி, பிற்பகல் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி வாதாடினார். அப்போது, தமிழகத்தில் வரும் நாட்களில் கொரோனா அதிகரிக்கும் என்பதால், இதுவே 10 வகுப்பு தேர்வை நடத்த சரியான நேரம் என்றும், தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தமிழக அரசு தரப்பில் தேர்வு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் கொரோனா வைரசால் வரும் நாட்களில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கூறி உள்ளனர். எனவே, தேர்வு நடத்த இதுவே சரியான நேரம். முக்கியத்துவம் வாய்ந்த தேர்வு என்பதால் 11 மாநிலங்கள் தேர்வை நடத்திவிட்டன. தமிழகத்தில், தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது.

அப்போது, மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மீற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு மையங்களில் கிருமினி நாசினி தெளித்தல், மாணவர்கள் மாஸ்க் வழங்குதல் உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் கூறினார். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தேர்வு நடத்தப்பட்டு மாணவர்களிள் வாழ்வு பாதிக்கப்பட்டாலோ, இறக்க நேரிட்டாலோ யார் பொறுப்பு? இழப்பீடு வழங்குவதற்குபதிலாக அவர்களின் வாழ்வுக்கு யார் உத்தரவாதம்கொடுப்பார்கள்? என நீதிபதிகள் கேட்டனர்.

‘கொரோனா பாதிப்பை பொருத்தவரை தற்பொது அபாய நிலை இல்லை. அக்டோபர், நவம்பரில் கொரோனா உச்ச நிலையை அடைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தேர்வுகளை தள்ளி நடத்துவதால்தான் அபாயம் அதிகரிக்கும் சூழல்உள்ளது, பேராபத்தாக முடியும்.’ என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

இவ்வாறு அடுத்தடுத்து தமிழக அரசு விளக்கம் அளித்தும் நீதிபதிகள் ஏற்கவில்லை. உடனே தேர்வை நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை என கூறினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »