Press "Enter" to skip to content

கொரோனா மையமாக விளங்கிய நியுயார்க்கில் கட்டுப்பாடுகள் தளர்வு

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியுயார்க்கில் 3 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு திரும்பினர்.

நியுயார்க்:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க் நகரமும், மாகாணமும் திகழ்ந்தது. பிற எந்தவொரு மாகாணத்தையும், நகரத்தையும் விட இங்குதான் கொரோனா தொற்று அதிகளவில் இருந்தது.

அமெரிக்காவின் 50 மாகாணஙகளில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது. அதில் நியுயார்க் மாகாணத்தில் மட்டுமே 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

நியுயார்க் நகரத்தில் மட்டுமே 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் அங்கு உயிரிழந்தனர்.

நியுயார்க் நகரம், உலகின் தூங்கா நகரம் என்ற பெயரைப்பெற்றிருந்தது. 24 மணி நேரமும் அது செயல்பட்டுக்கொண்டிருக்கும்.

அப்படிப்பட்ட நியுயார்க் நகரமும், மாகாணமும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத்தடுக்க 3 மாதங்கள் பொது முடக்கத்தின்கீழ் வைக்கப்பட்டன. அமெரிக்க பொருளாதார சரிவில் நியுயார்க் முக்கிய பங்கு வகித்தது.

நியுயார்க் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையே மாறி விட்டது. சூழலுக்கு ஏற்ப அங்குள்ள மக்கள் தங்களை மாற்றிக்கொண்டு வாழத்தொடங்கினர்.

நியுயார்க் நகரில் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் பாதிப்பு பதிவாகி நேற்றுடன் 100 நாட்கள் ஆனது. இந்த நிலையில் அங்கு நேற்று கட்டுப்பாடுகள் தளர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து சுமார் 4 லட்சம் பேர் நேற்று முதல் வேலைக்கு திரும்பி உள்ளனர். கட்டுமானத்துறை, சில்லரை விற்பனை துறை போன்றவை முதல் கட்டமாக செயல்படத்தொடங்கி உள்ளன. கட்டுமானத்துறையில் முக கவசம் அணிதல், கையுறைகள் அணிதல் ஆகிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பலவற்றில் நேற்று வேலைகள் மீண்டும் தொடங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜவுளித்துறையிலும் பணியாளர்கள் வேலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர்.

தினந்தோறும் கொரோனாவுக்கு 800-க்கு மேற்பட்டவர்களை பலி கொண்ட நகரம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளது.

நேற்று மாகாணம் முழுவதும் சில்லரை விற்பனை கடைகள் பரவலாக திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

நியுயார்க் நகரம் மற்றும் மாகாண அதிகாரிகள், மீண்டும் இயல்வு வாழ்க்கை நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இந்த கட்டுப்பாடு தளர்வுகள் சோதனை வலுவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இங்கு 8 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்துள்ளனர். இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள போதும் நல்ல லாபம் ஈட்டுகிற நிலைக்கு நியுயார்க் திரும்புவதற்கு 2022-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நியுயார்க்கில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் திறக்கப்பட்டிருந்தாலும், இப்போது மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பு இனத்தவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்த இன மக்கள் நடத்தி வருகிற போராட்டங்கள் நியுயார்க்கிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இது வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும் என சொல்லப்படுகிறது.

போராட்டத்தில் பெயரால் நியுயார்க்கில் கடைகள், வணிக நிறுவனங்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »