Press "Enter" to skip to content

சென்னையில் கொரோனாவில் இருந்து மீண்ட 97 வயது முதியவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 97 வயது நோயாளி குணமடைந்தது அனைவரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து மக்களை தொடர்ந்து அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்,  முதியவர்களுக்கு இந்த நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 97 வயது முதியவர் கிருஷ்ணமூர்த்தி, பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். இது அனைவரிடமும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணமூர்த்திக்கு கடந்த மாதம் 30ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு மூச்சுத்திணறல் இருந்துள்ளது. ஏற்கனவே உயர்  ரத்த அழுத்தம், இதய பாதிப்புகளும் இருந்ததால் அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதன் பயனாக அவருக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு குறைந்து, செயற்கை சுவாசம் நீக்கப்பட்டது. அவரது உடல் இயல்பு நிலைக்கு திரும்பியதும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நெகட்டிவ் என பரிசோதனை முடிவு வந்ததையடுத்து, நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமான மிக வயதான நபர் இவர் எனவும், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த வயதான நபர்களில் இவரும் ஒருவர் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »