Press "Enter" to skip to content

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினையில் அமைதியான முறையில் தீர்வு- அமெரிக்கா விருப்பம்

எல்லையில் அமைதி திரும்ப இந்தியாவும், சீனாவும் எடுக்கும் முயற்சிகளை ஆதரிப்பதாகவும், அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா கூறி உள்ளது.

வாஷிங்டன்:

இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சீனா தரப்பில் உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்த வீரர்களின் மொத்த எண்ணிக்கை 43 என எ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.  பதற்றத்தை தணிக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்தியா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்திருப்பது தொடர்பாக  ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியா- சீனா எல்லை பிரச்சனையில் அமைதியான முறையில் தீர்வு காண்பதற்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

‘இந்தியா – சீனா எல்லைப்பிரச்னை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள். எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் அமைதி திரும்ப இருநாடுகளும் எடுக்கும் முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய தேசியவாத புலியின் கோபத்தை சீன ராணுவம் தூண்டிவிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த கருத்தை வாஷிங்டன் எக்ஸாமினர் என்ற பத்திரிகையில் பத்திரிகையாளர் டாம் ரோகன் பதிவிட்டிருக்கிறார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »