Press "Enter" to skip to content

இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன்- எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்

சர்வதேச எல்லை வழியாக இந்திய பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டின் உளவு ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய பகுதியை உளவு பார்ப்பதற்காக வந்த ட்ரோனை எல்லைப் பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் உள்ள ரதுவா பகுதியில் உள்ள வயல்வெளியில் இந்த ட்ரோன் வீழ்த்தப்பட்டது.

அந்த ட்ரோனை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான விரிவான அறிக்கையை எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட உள்ளது.

எல்லைப்பகுதியில் உள்ள இந்திய வீரர்களை கண்காணித்து, பாதுகாப்பு இல்லாத இடங்களில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் இதுபோன்று ட்ரோன்களை பயன்படுத்தி உளவு பார்க்கின்றனர்.

குறிப்பாக ஹிராநகர் செக்டார் எப்போதுமே பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஒரு ஊடுருவல் பாதையாக இருந்து வருகிறது. அதன் நிலப்பரப்பு மற்றும் மழைக்காலங்களில் பாகிஸ்தானுக்கு பாயும் சிறு ஓடைகள் பயங்கரவாதிகளுக்கு சாதகமாக உள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »