Press "Enter" to skip to content

சீன ஊடுருவல் குறித்து மோடி அப்படி பேசவில்லை- பிரதமர் அலுவலகம் விளக்கம்

சீன ஊடுருவல் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே நடந்த மோதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசிக்கப்பட்டது.

அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியாவிற்குள் சீனப்படைகள் ஊடுருவவில்லை. ஊடுருவ முயன்றவர்களுக்குத் தக்கப் பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நமது ஆயுதப் படைகள் மேற்கொள்ளும்’ என தெரிவித்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.  இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை என பிரதமர் கூறுவது உண்மை என்றால், இருநாட்டு வீரர்களிடையே சண்டை நடந்தது ஏன்? இந்தியா ஏன் 20 உயிர்களை இழந்தது? என கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை எனறு தான் அனைத்துக் கட்சி கூட்டத்தல் மோடி பேசியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

‘அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நேற்று தெரிவித்த கருத்து தொடர்பாக சில தவறான தகவல் பரப்புகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும், சீனாவின் முயற்சி பாதுகாப்பு படையினரின் துணிச்சலான செயலால் முறியடிக்கப்பட்டது என்றே பிரதமர் குறிப்பிட்டார்’ என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »