Press "Enter" to skip to content

பதற்றம் அதிகரிக்கும் நிலையில் கல்வான் பள்ளத்தாக்கில் புதிய பாலத்தை அமைத்த இந்திய ராணுவம்

கல்வான் பள்ளத்தாக்கின் சீன எல்லை அருகே இந்திய ராணுவம் பாலம் அமைத்துள்ளது. இந்த பாலத்தின் மூலம் எல்லைக்கு மிக அருகே ராணுவ தளவாடங்களை சுலபமாக கொண்டு செல்ல முடியும்.

புதுடெல்லி:

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும்

சூழல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கின் எல்லையோரம் உள்ள ஷையோக் ஆற்றின் குறுக்கி இந்திய ராணுவம் பாலம் அமைத்துள்ளது. 60 மீட்டர் நீளமுள்ள அந்த பாலம் காண்கிரிட் மற்றும் இரும்பால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மூலம் கல்வான் ஆறு மற்றும் ஷையோக் ஆறு சங்கமிக்கும் முக்கிய பகுதியை எளிதில் அடையலாம். முன்னதாக மரக்கட்டைகளால் அமைந்திருந்த அந்த் பாலத்தில் ராணுவ தளவாடங்களை கொண்டு செல்ல முடியாமல் இருந்தது. 

ஆனால், தற்போது மறு சீரமைக்கப்பட்ட இந்த பாலத்தின் மூலமாக அனைத்து விதமான ராணுவ தளவாடங்களையும் இந்திய ராணுவத்தால் மேலும் சுலபமாக எல்லைக்கு கொண்டு செல்ல முடியும்.

ஷையோக் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இந்த இரும்பு பாலம் இந்திய-சீன உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில் (எல்ஒசி) இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மேலும், இந்திய-சீன படைகள் சண்டையிட்ட இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. எல்லையில் மோதல் நடைபெற்றதையடுத்து பாலத்தின் கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 72 மணி நேரத்தில் பணி முடிவுக்கு வந்தது.

தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ள இந்த பாலத்தால் எல்லையோரம் இந்திய வீரர்கள் சோதனைச்சாவடிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம். மேலும், ரோந்து பணிகளையும் அதிகரிக்க இந்த பாலம் உதவியாக இருக்கும். 

இந்த பாலம் வழியாக ராணுவம் தற்போது எல்லையில் போக்குவரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

சீனாவுடன் மோதல் அதிகரித்து வரும் நிலையில் எல்லையில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவது பாதுகாப்பை உறுதிசெய்ய எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »