Press "Enter" to skip to content

சசிகலா ஆகஸ்ட் 14-ல் விடுதலை?: பாஜக-வின் ஆசிர்வாதம் ஆச்சாரி டுவிட்டரில் தகவல்

பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி விடுதலையாக வாய்ப்புள்ளது என பாஜக-வின் ஆசிர்வாதம் ஆச்சாரி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் இவர்கள் நால்வரையும் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதா காலமானதால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர். அவரை டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சிறையில் சென்று சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே, நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ். மெகரிக் தெரிவித்திருந்தார். அதேசமயம், தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் சசிகலா பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறை சென்றார்.

இந்த சூழலில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த கர்நாடக சிறைத்துறை “ஒரு கைதியின் விடுதலை என்பது பல்வேறு சட்ட விதிகளை வைத்துத்தான் கணக்கிட முடியும். சசிகலா போன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராத தொகையைச் செலுத்தியது உள்ளிட்டவற்றை வைத்து விடுதலை தேதி மாற்றி அமைக்கப்படும். இதன் காரணமாக இப்போதைய நேரத்தில் இந்த தகவலை நாங்கள் வெளியிட முடியாது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சசிகலாவின் விடுதலை தொடர்பான அறிவிப்பை கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக வெளிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதியன்று சசிகலா விடுதலையாவார் என தெரிகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஆனால் பா.ஜனதாவின் ஆசிர்வாதம் ஆச்சாரி டுவிட்டரில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »