Press "Enter" to skip to content

உக்கடம் பெரியகுளக்கரையில் 1 ரூபாய்க்கு சுத்தமான குடிநீர் வழங்கும் எந்திரம்

கோவை உக்கடம் பெரியகுளக்கரையில் 1 ரூபாய்க்கு சுத்தமான குடிநீர் வழங்கும் எந்திரத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

கோவை:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் பெரியகுளத்தின் வடபுற கரையை மேம்படுத்துதல், அங்கு நடைபாதை அமைத்தல், சிறு சிறு பூங்காக்கள் அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வந்தன.

அங்கு ஐ லவ் கோவை என்ற வாசகம் எழுதப்பட்ட செல்பி ஸ்பாட் அமைக்கப்பட்டு உள்ளது. இது கோவை மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளது.

மேலும் பெரியகுளம் பகுதியில் 1 ரூபாய்க்கு சுத்தமான ஒரு லிட்டர் குடிநீர் வழங்கும் வாட்டர் ஏ.டி.எம். என்ற எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் பின்னர் இந்த குளக்கரையில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அத்துடன் அங்கு பலர் ஐ லவ் கோவை என்று எழுதப்பட்ட இடத்தில் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இந்த வாட்டர் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இந்த வாட்டர் ஏ.டி.எம். எந்திரத்தில் ஒரு லிட்டர் காலி பாட்டிலை அதில் உள்ள பைப்பின் கீழ் வைக்க வேண்டும். பின்னர் அந்த எந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள துளையில் ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டும். தொடர்ந்து அந்த பாட்டிலுக்குள் நன்கு சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் விழுந்துவிடும். பின்னர் பொதுமக்கள் அந்த தண்ணீரை பருகலாம் என்றனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »