Press "Enter" to skip to content

மின் கட்டணத்தை வசூலிக்க வந்த மின்வாரியத்துறை அதிகாரிகளை மின்கம்பத்தில் கட்டி வைத்த கிராம மக்கள்…

தெலுங்கானாவில் மின்கட்டணத்தை வசூலிக்க வந்த மின்வாரியத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஐதராபாத்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மின்சாரக்கட்டணத்தை கணக்கிடுவதிலும், கட்டணத்தை வசூலிப்பதிலும் நாடு முழுவதும் மின் துறையில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. 

மேலும், மின் கட்டணம் மிகவும் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. இதனால் சில சமயங்களில் மின்வாரியத்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தை சேர்ந்த மின்வாரியத்துறை அதிகாரிகள் இருவர் தங்கள் பணி எல்லைக்கு உள்பட்ட அலதுர்கம் என்ற கிராமத்தில் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தை வசூலிக்க நேற்று சென்றனர். 

அந்த கிராம மக்களிடம் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்தும் படி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராம மக்களில் சிலருக்கும், மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்களில் மின் கட்டணம் வசூலிக்க வந்த மின் வாரியத்துறை அதிகாரிகள் இருவரையும் அங்கு இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களால் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மின்வாரியத்துறை அதிகாரிகளை மீட்டனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து மின்வாரியத்துறை அதிகாரிகள் அளித்த புகாரையடுத்து கிராமத்தினரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »