Press "Enter" to skip to content

ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியாகிவிட்டதா? – மிகுதியாகப் பகிரப்படும் வாட்ஸ்அப் பிடிஎஃப்

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களும், பிடிஎஃப் ஃபைல்களும் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.

இதை உறுதி செய்யும் விதமாக ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டி  செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்திருந்தார். ஆனால் போட்டி அட்டவணை வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதில் இருந்தே வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ஐபிஎல் போட்டி அட்டவணை என்று பிடிஎஃப் ஃபைல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதிகள், மோதும் அணிகள், இடம் என போட்டி அட்டவனை விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அட்டவணை பிடிஎஃப் ஃபைல்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் இந்த போட்டி அட்டவணை போலியானது என்பது தெரியவந்துள்ளது. 

இந்த வைரல் அட்டவணையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தின் விவரங்கள் அரபு அமீரகம் என உள்ளதே தவிர மைதானத்தின் பெயர் இடம்பெறவே இல்லை. மேலும், அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் மைதானத்தின் பெயரும் இடம்பெறாமல் உள்ளது. 

போட்டி அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தாலும், மத்திய அரசிடம் வெளிநாட்டில் போட்டி நடத்துவது குறித்து அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு தரப்பில் இருந்ஹ்டு அதிகாரப்பூர்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வைரல் செய்தியில் பதிவான மற்றொரு தகவல் போட்டி நடைபெறும் நேரம் அனைத்து 4 அல்லது 8 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் 3.30 மணி அல்லது 7.30 மணியளவில் தொடங்களாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தகவல்களின் மூலம் வாட்ஸ் அப் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வைரலாகிவரும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை போலி என்பது உறுதியாகியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »