Press "Enter" to skip to content

ரபேல் விமானங்கள் தரையிறங்க உள்ளதால் அம்பாலா விமான நிலையம் அருகே 144 தடை

ரபேல் போர்விமானங்கள் தரையிறங்குவதைக் கருத்தில் கொண்டு அம்பாலா விமானநிலையம் அருகே 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

தாக்குதல் ரகத்தைச் சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு (2021) இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் விதியாகும்.

இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை முறைப்படி பெற்றுக் கொள்வதற்காக கடந்த அக்டோபரில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார். அங்கு அவர் விமானங்களுக்கு பூஜையும் செய்தார்.

இந்த 10 விமானங்களில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் முதல் பிரிவாக இந்தியா வருகின்றன. அவை நேற்று முன்தினம் பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி தனது பயணத்தை தொடங்கி விட்டன. இந்த விமானங்களை இயக்குவதற்காக சிறப்பான பயிற்சி பெற்றுள்ள இந்திய விமானப்படை அதிகாரிகள், இந்த விமானங்களை இந்தியாவுக்கு கொண்டு வருகின்றனர். வரும் வழியில் வானிலே எரிபொருள் நிரப்பப்பட்டது. நடுவானில் எரிபொருள் நிரப்பிய புகைப்படங்களையும் இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இந்தியா-பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்து புதன்கிழமை 5 விமானங்களும் இந்தியா வந்து சேர்கின்றன.

இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் வருகையால், அம்பாலா விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும்போது புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்பாலா போக்குவரத்து டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »