Press "Enter" to skip to content

குதிரை பேரத்திற்கு மற்றொரு பெயர் காங்கிரஸ் – குமாரசாமி கடும் தாக்கு

குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ் என்று குமாரசாமி கடும் விமர்சனத்தை கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தைக் காப்போம் என்ற பெயரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்க்க முயற்சி செய்வதாக பா.ஜ.க.வுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளது. இதற்கு முன் காங்கிரஸ் என்ன செய்தது?

ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லையா?. இது எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவது ஆகாதா? அரசுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு கட்சியின் எம்.எல்.ஏ.க்களை அப்படியே கட்சியில் சேர்த்துக் கொள்வது தான் ஜனநாயகமா?

ஒரே கருத்து உடைய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை நீங்கள் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்வதாக இருந்தால், உங்களை யார் ஆதரிப்பார்கள்? இந்த தவறு உங்களுக்கு தெரியவில்லையா?

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்காக எங்கள் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவில்லையா?. இதன்மூலம் எங்கள் கட்சியை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி செய்யவில்லையா?.

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் விஷயத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. 2 கட்சிகளுமே கிரிமினல் மனநிலை கொண்டவை. எஸ்.எம்.கிருஷ்ணா முதல் மந்திரியாக இருந்தபோது எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவில்லையா? 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கு பிறகு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்க முயற்சி செய்யவில்லையா? எனது இந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும்.

கடந்த 2004-ம் ஆண்டு எங்கள் கட்சியை உடைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. அதனால் தான் எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை ஒன்றுசேர்த்து அழைத்துச் சென்று தரம்சிங் தலைமையில் இருந்த கூட்டணி அரசை கவிழ்த்தேன். கட்சி தாவல் தடை சட்டம் பலமானதாக இல்லை. அதனால் தான் இத்தகைய ஜனநாயக விரோத சக்திகள் அதிகரித்து வருகிறார்கள்.

கட்சி தாவுபவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் அவர்கள் எந்தப் பதவியை வகிக்கவும் அனுமதிக்கக் கூடாது. இதுகுறித்து விவாதம் நடைபெற வேண்டும். அதன் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். குதிரை பேரத்தின் இன்னொரு பெயர் காங்கிரஸ். அரசியலில் குதிரை பேரம் என்ற வார்த்தையே காங்கிரசால் தான் வந்தது என தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »