Press "Enter" to skip to content

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருந்தால் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன்: குமாரசாமி

காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன் என்று குமாரசாமி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

பெங்களூரு :

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ராமநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்குமாறு முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் கேட்டேன். அதை எடியூரப்பா ஏற்றுக் கொண்டுள்ளார். நான் தனிப்பட்ட முறையில் எந்த உதவியும் கேட்கவில்லை. தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு தான் நிதி கேட்டேன். எனது அரசியல் செல்வாக்கை காப்பாற்ற வேண்டும் அல்லவா?.

கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நான் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே கூறியுள்ளேன். நான் அரசுக்கு சிக்கல் கொடுத்தால், மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பா.ஜனதாவுடன் நான் கூட்டணி சேரவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு நான் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினேன்.

இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நீக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை லட்சுமண் சவதி மறுத்துள்ளார். இவ்வாறு வெளியாகும் தகவல்களால் வளர்ச்சி பணிகள் தான் பாதிக்கும். இதை தலைவர்கள் புரிந்து கொண்டு பேச வேண்டும். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரசை குறை சொல்வது தவறு.

அரசை விமர்சிப்பதை விட அரசு என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூற வேண்டும். முன்வரும் நாட்களில் அரசின் தவறுகளை கண்டித்து போராடலாம். ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பதை கண்டித்து இங்குள்ள காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் கர்நாடக மக்களுக்கு என்ன பயன்?.

கர்நாடக மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து காங்கிரசார் போராட்டம் நடத்த வேண்டும். காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு பதிலாக பா.ஜனதாவுடன் கூட்டு சேர்ந்திருந்தால் நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்திருப்பேன். ஆனால் தேவேகவுடாவின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம்.

ஜி.எஸ்.டி. இழப்பீடு தர முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் கர்நாடகத்திற்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படும். எனது தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்ததில் சி.பி.யோகேஷ்வர் முக்கிய பங்காற்றினார். அதனால் அவருக்கு பா.ஜனதா எம்.எல்.சி. பதவியை வழங்கியுள்ளது. அவர் மக்களுக்கு நல்லது செய்யட்டும். சிறுபிள்ளைத்தனமாக அரசியல் செய்வதை விட்டுவிட்டு சி.பி.யோகேஷ்வர் மக்கள் நல பணிகளை ஆற்ற வேண்டும்.

நான் ஆரம்பம் முதலே காங்கிரசுக்கு எதிராகவே போராடி வருகிறேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டோம். காங்கிரசாரின் சதியால் தேர்தலில் எங்களால் இலக்கை அடைய முடியவில்லை. வெறும் விளம்பரத்திற்காக காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். சமூக இடைவெளியை பின்பற்றாமல் அவர்கள் போராட்டம் நடத்துவது சரியா?.

2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எடியூரப்பா தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்டதால், காங்கிரஸ் வெற்றி பெற்றது. இல்லாவிட்டால் அக்கட்சிக்கு முழு பெரும்பான்மை கிடைத்திருக்காது. கொரோனா வைரசை தடுப்பது குறித்து நான் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன். பா.ஜனதா அரசு ஒரு ஆண்டு நிறைவு செய்துள்ளது. அதை விழா நடத்தி முதல்-மந்திரி கொண்டாடியுள்ளார். கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விழா நடத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

வெள்ளத்தால் முழுமையாக சேதம் அடைந் வீடுகளுக்கு தலா ரூ.5 லட்சம் கொடுத்துள்ளதாக அரசு சொல்கிறது. ஆனால் ஒருவருக்கு கூட ரூ.5 லட்சம் நிதி உதவி கிடைகக்கவில்லை. இந்த குறைகளை அரசு சரி செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »