Press "Enter" to skip to content

கொரோனா நோயாளிகள் கைபேசி பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள கொரோனா நோயாளிகள் உறவினர்களுடன் பேசுவதற்காக செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

இவ்வாறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. சில மருத்துவமனைகள் இதை அனுமதித்தாலும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளன.

இதனால் அந்த நோயாளிகள் தங்கள் உறவினர்களுடன் பேச முடியாமல் மனதளவில் சோர்ந்துள்ளனர். கொரோனா நோயாளிகளை உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படாத நிலையில், அவர்களுடன் செல்போனிலும் பேச முடியாததால், அவர்களது உடல் நிலை குறித்து அறிய முடியாமல் உறவினர்களும் பரிதவித்து வருகின்றனர்.

எனவே கொரோனா வார்டுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதார மற்றும் மருத்துவக்கல்வி முதன்மை செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சுகாதாரப்பணிகள் இயக்குனர் டாக்டர் ராஜீவ் கார்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோயாளிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க செல்போன்கள் அனுமதிக்கப்பட்டாலும், சில மாநிலங்களில் மருத்துவமனை நிர்வாகங்கள் கொரோனா நோயாளிகள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கவில்லை எனவும், இதனால் சிகிச்சை பெறும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனைகளில் கொரோனா வார்டு மற்றும் அவசர சிகிச்சை வார்டுகளில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என சமூக தொடர்புகளை பெறுவதன் மூலம், அவர்கள் உளவியல் ரீதியான வலுவை பெறுவார்கள். இது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழுவுக்கும் உதவும்.

எனவே கொரோனா நோயாளிகள் தங்கள் உறவினர், நண்பர்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் வீடியோ அழைப்பில் பேசுவதற்கும் உதவும் வகையில், நோயாளிகள் செல்போன் மற்றும் டேப்லெட் வசதிகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

செல்போன் மற்றும் டேப்லெட் போன்ற கருவிகளை கிருமி நீக்கம் செய்வதற்காகவும், நோயாளிகள் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்கான நேரத்தை ஒதுக்குவதற்கும் தகுந்த நெறிமுறைகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »